தசமஹா வித்யா  -  ஸ்ரீ புவனேஸ்வரி - நான்காம் வித்யை

மாதா ஸ்ரீ புவனேஸ்வரி

ஆஹா.. எத்தனை புண்ணியம் செய்தோமோ அன்னை அவளை பற்றி தெரிந்துகொள்ள. தசமஹா வித்யையில் அடுத்து ஸ்ரீ புவனேஸ்வரி தேவியின் மகிமைகளை எழுதலாம் என்று எடுத்தவுடன் இனம்புரியாத ஒரு சந்தோஷம். அவளைப்பற்றி படிக்க படிக்க மனம் எங்கோ செல்கிறது. என்னை எழுத வைப்பதும் அவள் செயலே என்ற பூரிப்புடன் தொடர்கிறேன்.
தசமஹா வித்யையில் நான்காம் வித்யை ஸ்ரீ புவனேஸ்வரி வித்யை. அண்ட சராசரங்களை ஆளும் அன்னை ஆதிபராசக்தியே அவள். ஸ்ரீ புவனேஸ்வரி தேவி வசிக்கும் இடம் மணீத்வீபம். அமிர்த கடல் சூழ்ந்த இந்த மணீத்வீபம் பிரம்ம லோகம், வைகுண்டம், கைலாசம், கோலோகம் முதலிய உலகங்களுக்கும் மேல் ஒரு குடைபோல உள்ளது.இந்த மணீத்வீபமே ஸுபாலோப நிஷத்தில் ஸர்வலோகா என்று குறிப்பிடபடுவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
அனைத்து உலகங்களுக்கும் காரணமாண தேவி தான் தங்குவதற்காண உலகமாக முதலில் தன் மனதிற்கு பிடித்தபடி இந்த உலகத்தை ஏற்படுத்தினாள். மிகப்பொலிவுடன் விளங்கும் இந்த மணீத்வீபத்திற்கு இணையாண உலகம் எங்கும் இல்லை என்று தேவிபாகவதம் வர்ணிக்கின்றது.
 

 

அமிர்த கடலால் சூழப்பட்டுள்ள மணீத்வீபம் பதினெட்டு மதில் சுற்றுக்களாகிய பிரகாரங்களுடன் மிகப்பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது.
அவை முறையே
இரும்பு
வெண்கலம்
செம்பு
ஈயம்
பித்தளை
பஞ்சலோஹம்
வெள்ளி
செம்பொன்
புஷ்பராகம்
பத்மராகம்
கோமேதகம்
வைரம்
வைடூர்யம்
நீலம்
முத்து
மரகதம்
பவளம்
நவரத்தினங்கள் ஆகியவற்றால் அமையபெற்றுள்ளது.

அவளின் இருப்பிடம், சிந்தாமணி க்ருஹத்தில் அமர்ந்த நிலை போன்றவைகளை வரும் பதிவுகளில் காணலாம்.
ஸ்ரீ புவனேஸ்வரி தேவியை பற்றிய இந்த பதிவு மூன்று அல்லது நான்கு பதிவுகளாக நீளும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் அவ்வளவு அற்புதமான விஷயங்கள் காண்கிறேன். எனக்கு கிடைத்த புத்தகங்கள் மற்றும் கேட்ட விஷயங்களை கொண்டே இந்த முயற்சியில் அன்னையின் அருளால் இறங்கியிருக்கிறேன். அன்னையின் விருப்பம் எப்படியோ அப்படியே நடக்கும்.

ஜகன்மாதாவின் வாஸஸ்தலமான மணீத்வீபத்தில் பதினெட்டு பிரகாரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள நான்கு மண்டபங்கள்.

அதில்

ஸ்ருங்கார மண்டபத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி ஸிம்ஹாஸனத்தில் தேவர்கள் புடைசூழ வீற்றிருப்பாள். அங்கு வசினி முதலிய தேவதைகளும், தேவ லோக அரம்பையர்களும் இன்னிசை முழங்குவர் அதில் அன்னை மகிழ்ந்திருப்பாள்

இரண்டாவதாக இருக்கும் முக்தி மண்டபத்தில் அமர்ந்து ஸ்ரீ புவனேஸ்வரி தேவி ஒவ்வொரு பிரம்மாண்டத்திலும் உள்ள பக்தர்களுக்கும் ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் என்ற முக்திகளை கொடுத்து அருள்கிறாள்.

மூன்றாவதான ஞான மண்டபத்தில் அமர்ந்துள்ள ஸ்ரீ புவனேஸ்வரி தன் பக்தர்களுக்கு ஞானத்தை உபதேசிக்கிறாள்.

நான்காவதாக ஏகாந்த மண்டபத்தில் அமர்ந்துள்ள ஜகன்மாதா ஸ்ரீ புவனேஸ்வரி மந்த்ரிணீ தேவிகளுடன் அகில உலகங்களையும் காத்து அருள்கிறாள்

சிந்தாமணி க்ருஹம்

இந்த சிந்தாமணி கிருஹமாணது ஆகாயத்தில் வேறு பிடிப்பு இல்லாது பிரகாசிக்கின்றது. ஒவ்வொரு உலகங்களிலும் உள்ள தேவீ உபாசஹர்களான தேவர், நாகர், மனிதர் மற்றவர் என அனைவரும் இங்கு வந்தே சேருவர். சாக்த் க்ஷேத்திரங்களில் பிராணணை விட்டவர், தேவியின் அர்ச்சனையில் ஈடுபட்டவர் அனைவரும் இங்கு வந்து சேருவர்

தேன் தயிர், அமிர்தம், திராக்‌ஷ ரசம், மாம்பழ ரசம், கரும்பு ரசம் இவைகளை பெருக்கும் எண்ணிலடங்கா நதிகள் ஓடும்.இங்குள்ள தருக்கள் இஷ்டமானவற்றை அளிக்கும்.இங்குள்ள கிணறுகள் அருந்துவதற்கு பிரியமான பானங்களை கொடுக்கும்

ரோஹம், கிழத்தன்மை, கவலை, பொறாமை, காமம், க்ரோதம், போன்ற கேடுகள் இங்கு கிடையாது ஆயிரம் சூரியனை பிரதிபலிக்கும் ஒளி மிகுந்த நித்ய யுவர்களாக மனைவிகளுடன் இங்குள்ளவர்கள் ஸ்ரீ மாதாவை உபாசித்து கொண்டு இருக்கின்றனர்.

இங்கு பூரணமான ஐஸ்வர்யம், சிருங்காரம், ஸர்வஞ்ஞதை, தேஜஸ், பராக்ரமம், தயை எல்லாம் இங்கு நிறைந்திருக்கின்றன.

அரசனின் ஆனந்தத்திலிருந்து பிரம்மானந்தம் வரை அனைத்தும் இங்கே பூரணமாய் இருக்கின்றது.

இவ்வளவு மகிமை வாய்ந்த சிந்தாமணி க்ருஹத்தில். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மஹாதேவன் ஆகிய நால்வரும் கால்களாகவும் சதாசிவன் அவர்கள் மேலுள்ள பலகையாகவும் உள்ள ஓர் அழகிய மஞ்சத்தில் ஸ்ரீ புவனேஸ்வரர் வீற்றிருக்கிறார். இந்த புவனேஸ்வரரின் இடது மடியில் அன்னை ஜகன் மாதா ஸ்ரீ புவனேஸ்வரி வீற்றிருக்கிறாள்.

சிந்தாமணி க்ருஹத்தில் ஸ்ரீ புவனேஸ்வரரின் இடது மடியில் ஒய்யாரமாய் வீற்றிருக்கும் அன்னை புவனேஸ்வரி தன் விளையாட்டிற்காக தன்னையே ஆணாகவும் பெண்ணாகவும் இரண்டாக ஆக்கிக்கொண்டாள்.
அதில் ஆணுருவம் ஐந்து முகங்களும் மூன்று கண்கலும் உடையவர் மான், அபயம், பரசு, வரம் தாங்கும் கரத்தினர் 16 வயது இஅளமையுடன் கோடி மன்மதர்களின் காந்தியுடன் ஸ்படிகம் போன்ற வெண்மையான தோற்றமும் கொண்டவர்.

பிரமிக்க வைக்கும் அழகுடன் கண்டவர் மயங்கும் வண்ணம் விற்றிருக்கும் ஸ்ரீ புவனேச்வரரின் இடது மடியில் புவனேச்வரியை இவ்வாறு வர்ணிக்கப்படிகிறது

பல ரத்தினங்கள் பதித்த ஒட்டியணம் இடையில் மின்னும்., தங்கத்தால் ஆன தோள் வளை, ஸ்ரீ சக்ரம் போன்று அமைந்த தோடுகள், பிறைச்சந்திரனை வெல்லும் நெற்றி, கோவைக்கனியை பழிக்கும் உதடுகள், கஸ்தூரி, குங்குமம் கூடிய திலகம், சந்திர சூரியன் போன்ற சூடாமணி, உதிக்கும் சூரியன் போன்ற மூக்குத்தி, அழகிய முக்தாஹாரம், சந்தனம், கற்பூரம், குங்குமம் இவை பூசிய மார்பகம், சங்கம் போன்ற கழுத்து, மாதுளம் முத்துக்கள் போன்ற பற்கள் ஆகியவற்றுடன் சிரத்தில் அழகிய ரத்தினங்களால் ஆன கிரீடம் பிரகாசமாக ஜ்வலிக்கும்.

வண்டுகள் கூட்டம் போன்று மின்னும் அளகங்கள், களங்கம் அற்ற குறையாத சந்திரன் போன்ற வதனம், மாணிக்கம் பதித்த மோதிரங்கள் நிறைந்த விரல்கள், தாமரை மலர் போன்ற மூன்று கண்கள் பத்மராகம் போன்ற சிவந்த திருமேனி அழகிய கிங்கிணிகள் ஒலிக்கும் கை வளையல்கள், முக்தாஹரத்தில் திகழும் பதக்கங்கள் மல்லிகைபூவின் நறுமணம் கமழும் கபரீபாரம் (கேசம்) இவை எல்லாம் அவள் செவ்விய திருமேனியில் அழகு பெற்றிருக்கும்.

வரம், பாசம், அங்குசம், அபயம் ஆகிய திருக்கரங்கள், மெல்லிய தேகம், கோடிக்கணக்காண சந்திர சூரியர்களின் ஒளியை பிரகாசிக்கும் அவள் உருவம். வீணையின் இசையைபோன்ற மதுரமான அவளின் பேச்சு, கருணையின் மொத்த வடிவமாய் நம் அன்னை ஸ்ரீ புவனேஸ்வரி.

போதுமா? இல்லை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நம் கற்பனைகளுக்கு துளியும் எட்டாத பொலிவுடன் வீற்றிருக்கும் அன்னையின் சந்நிதியில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி உருப்பெற்றிருக்கும்.
லஜ்ஜா, துஷ்டி, புஷ்டி, கீர்த்தி, காந்தி க்ஷமா, தயா, புத்தி, மேதா, ஸ்ம்ருதி, லக்ஷ்மி ஆகிய தேவதைகள் அனைவரும் இவளின் அருளால் உருவம் பெற்று இவள் பக்கத்திலேயே இருப்பார்கள்.

ஜயா, விஜயா, அஜிதா, அபராஜிதா, நித்யா, விலாஸினி, தோக்த்ரீ, அகோரா, மங்களா நவா என்ற பெயர்களைக் கொண்ட பீட சக்திகள் இவள் பக்கத்திலிருந்து துதிப்பர். அது மட்டுமா ? சங்க நிதியும் பத்ம நிதியும் அவளுடனேயே இருக்கும். அவைகளிலிருந்து ரத்னங்களையும் ஸ்வர்ணத்தையும் ஏழு தாதுக்களையும் பெருக்கும் நதிகள் அமிர்தக் கடலிடை சென்று சேரும்.

இவளுடைய உறவினால் தான் எல்லோருக்கும் இறைவனாய் இருக்கும் பெருமை மஹேச்வரருக்கு கிடைத்தது.

ஹ்ரீம் கார ரூபிணியாண ஸ்ரீ புவனேஸ்வரி தேவியை சாக்தத்தின் அனைத்து நூல்களும் கொண்டாடுகின்றன..
பைரவீ, பீமரூபா, பீமா, புவனேஸ்வரி என நான்கு ரூப பேதங்கள் இருப்பதாக மூல நூல்கள் குறிப்பிடுகின்றன. அதற்கான மந்திரங்களும் இருக்கின்றது

ஸ்ருஷ்டிக்கு தயாராகும் பிரம்மா, விஷ்ணு ருத்ரன் அன்னை பராசக்தியின் ஆணையின்படி புஷ்பக விமானம் ஒன்றில் செல்கின்றனர்.
பூமியையும், பிரம்மலோஹத்தையும், கைலாயத்தையும், வகுண்டத்தையும் பார்த்து வியந்து மணித்வ்வீபத்தை அடைகின்றனர்.

அங்கு சிந்தாமணி க்ருஹத்தில் ஹ்ருல்லேகா முதலிய சக்திகள் அனங்க குஸுமா முதலிய ஆபரண தேவதைகள் சூழ ஸர்வாபரண பூஷிதையாக ஷ்ட்கோணத்தின் மத்தியில் ஸ்ரீ புவனேஸ்வரனின் மடியில் ஸ்ரீ புவனேஸ்வரி தேவி அமர்ந்திருக்கிறாள்..

மூவரும் அவளின் தேஜஸ் கண்டு ஆனந்தமும் வியப்பும் மேலிட விஷ்ணு கூறுகிறார் “ நமக்கெல்லாம் மூலமானவள் இவளே மஹாமாயா. யோகிகளினால் அடையத்தகுந்தவள்.மற்றவர்களாள் எய்துவதற்கு அரியவள்.பகவானுடய இச்சா ஸ்வரூபினி. நாம் முன் செய்த தவப்பயனின் பொருட்டே இவளைக்காணும் பேறு பெற்றோம். உலகம் எல்லாம் ஜல மயமானபொழுது நான் குழந்தையாக கால் கட்டை விரலை வாயில் சேர்த்துச் சுவத்துக்கொண்டிருக்கும் பொழுது ,பாட்டுப்பாடி என்னை தாலாட்டியவள் இவள். இவள் நமது தாய் “ என்று கூறினார்.

விமானத்திலிருந்து இறங்கி வாயிற்படி அருகே சென்ற மூவரையும் புன்முறுவலால் பெண்ணாக்கினாள். ஆபரணங்கள் அணிந்த யுவதிகளாய் அன்னையின் பாதம் பணிந்து வணங்கிய மூவரும் அவளின் திருவடியில் உள்ள கண்ணாடி போன்ற நகத்தில் ஸ்தாவர ஜங்கமங்கள் நிறைந்த பிரம்மாண்டங்களை கண்டனர்.

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், வாயு, அக்னி, யமன், சூரியன், வருணன், சந்த்திரன், த்வஷ்டா, குபேரன், இந்த்திரன் முதலிய தேவர்களையும், பர்வதங்கள், கடல்கள், நதிகள், கந்தர்வர், அப்ஸர்ஸ்கள், அசுவினிதேவர்கள், வசுக்கள், ஸாத்யர், ஸித்தர், பித்ருக்கள், சேஷன் முதலிய நாகங்கள், ராக்‌ஷஸர்கள், கைலாயம், வைகுண்டம் முதலிய லோஹங்களையும் கண்டனர் கடலில் சேஷசாயியாக வீற்றிருக்கும் திருமாலின் உந்தியிலே தாமரையில் பிரம்மனையும், அருகிலே மதுகைடபர்களையும் கண்டு, இவள் தான் உலகத்தின் தாய் என்பதை உணர்ந்து ஆனந்தித்து அவளுக்கு பணிவிடை செய்தனர்

பிரம்மா, விஷ்ணு, ருத்ரனின் பணிவிடைகளில் மகிழ்ந்த பராசக்தி அஹங்காரம் உள்ளிட்ட ஏழு பெதங்களைக்கொண்ட மஹா தத்துவத்தை பிரம்மனிடம் கொடுத்து அதிலிருந்து பஞ்ச பூதங்களை உண்டாக்கிகொள்ளும்படி அருளினாள். ரஜோ குணத்துடன் வெண்ணாடை அணிந்து அழகிய புன் சிரிப்புடன் விளங்கிய மஹா சரஸ்வதியை அளித்து “இவள் என் விபூதி, இவளுடன் சத்யலோஹம் சென்று ஸ்ருஷ்டியை துவக்குமாறும் பணித்தாள். மேலும் ஸத்வ குணப்பிரதானராகிய விஷ்ணுவை எப்பொழுதும் கௌரவிக்கவேண்டும், அவர் ஆபத்தி தவிர்த்து பல அவதாரங்கள் எடுத்து உங்களுக்கு உதவுவார். நவக்‌ஷரமந்திரத்தை எப்பொழுது ஜபம் செய்யவும் அது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்றும் அனுக்கிரஹம் செய்தாள்.

விஷ்ணுவிடம் மஹா லக்‌ஷ்மியையும் , சங்கரரிடம் மஹா காளியையும் சக்திகளாக ஏற்றுக்கொள்ள அனுக்ரஹித்தாள்

பிரமன், விஷ்ணு, சிவன் மூவரும் என்னுடைய குணங்களால் உதித்தவர்கள்.சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பேதம் கற்பிப்பவர் நரகம் எய்துவர். என்று லோகமாதா விஷ்ணுவிடம் “ வாக்பீஜம், காமராஜபீஜம், மாயா பீஜம் என்ற மூன்று அக்‌ஷரங்கள் கொண்ட என்னால் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரத்தை வைகுண்டத்தில் அமர்ந்து ஜபித்துகொண்டிருக்குமாறு அருளினாள்.

சங்கரருக்கு நவக்‌ஷரியை ஜபம் செய்துகொண்டு கைலாயத்தில் வீற்றிருக்குமாறும் அருளினாள்

ஹ்ரீம் என்ற மஹா மந்த்ரத்தின் தேவதை ஸ்ரீ புவனேஸ்வரி.

சாரதா திலகத்தின் உரை எழுதிய ஸ்ரீ ராகவ பட்டர் “ ஹரிஹரஸ்வரூபமே புவனேஸ்வரி தேவி “ என்கிறார்.

புவனம் என்ற சொல்லுக்கு மாயை என்பது பொருளாய் இருப்பதால் மாயைக்கு ஈஸ்வரி புவனேஸ்வரி என்று தேவிபாகவதத்தில் வியாசாசார்யார் உரை எழுதியிருக்கிறார்.

ஸப்தஸ்தீ படிப்பதற்கு முன்பு படிக்கப்படும் ராத்ரி ஸூக்தம் புவனேஸ்வரியை குறிக்கின்றது.

ஸப்தஸதீ ஸர்வஸ்வ உரையில், முக்கிய ஏழு கல்பங்களில் பிரம்மா, இந்திரன், குரு, சுக்ரன், விஷ்ணு, ருத்ரன், தேவர்கள் இவர்களால் உபாசிக்கப்பட்டவர்களும், இங்கு பிரம்மனால் துதிக்கப்பட்டவர்களும் ” ஸப்தஸதீகள் “ என்று வியாஸரால் குறிப்பிடப்படுகின்ரனர். அவர்கள் முறையே காளீ, தாரா, சின்னமஸ்தா, ஸூமுகீ, புவனேஸ்வரி, பாலா, குப்ஜா என்பவராவர். இவர்கள் எழுவரே முதல் சரித்திரத்தினால் கூறப்படுகின்றனர் என்பது உரையின் கருத்து. இதிலிருந்து ஸப்த ஸ்தியின் முதல் சரிதிரத்தில் துதிக்கப்படும் ஏழு ஸதீகளில் “ ஸ்ரீ புவனேஸ்வரி ஐந்தாவது ஸதீ என்று அறியமுடிகிறது.

உலகின் மூலமானவளும், பலகோடி பிரம்மாக்களும், விஷ்ணுக்களும், ருத்திரர்களும், ஸேவிக்கும் அன்னை ஸ்ரீ புவனேஸ்வரியை பிரார்த்தித்து நம் வாழ்வை புனிதமாக்குவோம்.

ஜய ஜய ஸ்ரீ புவனேஸ்வரி

ஸ்ரீ வாராஹி உபாஸஹர்
தி.ஸ்ரீனிவாசராமன் சர்மா
www.srivarahifoundations.in

ஸ்ரீ: சுபம். மங்களம்
 
 
 


Vinayagar Slokams Murugan Slokam Sivan Slokam Durga Slokams Vishnu Slokams Lakshmi Stotram Hanuman Slokams
Sudarsan Slokams
Narasimha Slokams Shirdi Sai Slokams  Ayyappan Slokam Other Slokas


 
  All Rights reserved - 2009-2020  
  Powered By www.sriwebsolutions.com